காவிரி படுகையில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்
எண்ணூர்-தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்போது மயிலாடுதுறை அருகே நீடூர் வை.பட்டவர்த்தி கிராமத்தில் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இறக்கி இருக்கிறது. இதனைஎதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் குழாய்கள் அப்புறப்படுத்தப்படவில்லை.
இதேபோன்று செம்பனார்கோவில் அருகே கடலி- திருவிளையாட்டத்திலும் குழாய்கள் கொண்டுவந்து அடுக்கப்பட்டிருக்கின்றன.
காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர்-தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் என்பது இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போதுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று காவிரிப்படுகை சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இங்கே எண்ணெய்- எரிவாயு குழாய்களை அமைப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதை கடலில் குழாய் அமைத்து காவிரி படுகை பாதிக்காத வகையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.
ஆகவே, வை.பட்டவர்த்தியில் கொண்டுவந்து வைத்திருக்கக்கூடிய ராட்சத குழாய்களை உடனே அகற்றி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.