குறிஞ்சிப்பாடி அருகே, உள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீங்கான் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அரசுக்கு சொந்தமான 80 செண்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகை மற்றும் பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
மேற்கண்ட குத்தகை தொகையை செலுத்த அரசு சார்பில் பலமுறை தெரிவித்தும், நிர்வாகம் தொகையை கட்டவில்லை. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார், மண்டல துணை தாசில்தார் ஶ்ரீதர், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா ஜேசுதாஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தனியார் பீங்கான் தொழிற்சாலையை ஜப்தி செய்ய சென்றனர்.
அப்போது, அங்கிருந்த பீங்கான் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஓரிரு நாட்களில் நிலுவையில் உள்ள குத்தகை தொகையை கட்டி விடுவதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு, அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.