சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், பாதுகாவலர்கள், அப்பல்லோ டாக்டர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அப்பல்லோ டாக்டர்கள் 11 பேரின் சாட்சியத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிந்து கொள்ளும் வகையில் மறுவிசாரணை செய்ய அப்பல்லோ தரப்பு கோரியது. இதை ஏற்றுக்கொண்ட ஆணையம், 11 டாக்டர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்று, அப்பல்லோ டாக்டர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில், அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் இன்று (புதன்கிழமை) ஆஜராக ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.