சென்னை, சட்டசபை கூட்டத்தில் இன்று சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கும் போது, கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துவரி 200, 300 சதவீதம் என்று உயர்த்தப்பட்டது.
தற்போது 25 முதல் 150 சதவீதம் வரையில் தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது .இந்தாண்டு 15ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வருவாய் வரவேண்டும்.உள்ளாட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லதான் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டது என கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்:-
மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்ததது. மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது.
ஆனால் இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள்.
சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை. ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்காமல், சொத்துவரி உயர்த்தபட்டு உள்ளது. சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது 83 சதவீத மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை.
தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும். அரசின் முயற்சிக்கு வித்தியாசம் இன்றி அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என கூறினார்.
சொத்துவரி உயர்வு தொடர்பான முதல்-அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.