தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் உயரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரியை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை அரசு நினைத்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார். பொதுமக்கள் விரும்புவது போல் சொத்துவரி உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனை அடுத்து பேசிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா, மக்களின் நலன் கருதி சொத்துவரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல, அனைவரின் கோரிக்கைகளையும் ஏற்று சொத்து வரியை குறைக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய, ஏழை மக்களின் சார்பாக சொத்து வரியை குறைக்க கோரிக்கை விடுப்பதாக புரட்சி பாரத கட்சி எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.