மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூர், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி 2021-22-ம் பருவத்தில் 29.6.2022 வரை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைபயறு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதன்மை கொள்முதல் நிலையங்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்படவுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு உளுந்து 4 ஆயிரம் மெட்ரிக் டன், பச்சைப்பயிறு 800 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உளுந்து கிலோ ரூ.63-க்கு (ரூ.6300-குவிண்டால்) விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
பச்சைபயறு கிலோ ரூ.72.75-க்கு (ரூ.7275-குவிண்டால்) காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேற்படி உளுந்து மற்றும் பச்சைப்பயிறு விளைபொருள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இதர பொருட்கள் கலப்பு 0.10 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், வண்டுதாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் இருக்கலாம்.
விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விற்பனைக்கு கொண்டுவருவதற்கு முன்பு உரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முன்பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்யும்போது அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். அழைப்பு வரும் தேதி அன்று விளைபொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்யவேண்டும்.
விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டம் தொடர்பான விவரங்களை விருத்தாசலம் விற்பனைக்கூடத்தை 04143-238258, 9865639680 என்ற எண்ணிலும், சேத்தியாத்தோப்பு விற்பனைக் கூடத்திற்கு 9585444340, காட்டுமன்னார்கோவில் விற்பனைக்கூடம் 7598157823 மற்றும் குறிஞ்சிப்பாடி விற்பனைக்கூடத்தை 9786101242 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) மற்றும் கடலூர் விற்பனைக்குழு செயலாளர் ஆகியோரை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.