0 0
Read Time:3 Minute, 32 Second

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம் தனி ஊராட்சியாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு கொள்ளிடத்திலிருந்து போக்குவரத்து வசதி இல்லை. இதன் காரணமாக பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் படகின் மூலம் ½ மணி நேர பயணத்துக்கு பின்பு கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சென்றடைய வேண்டும்.

இதனால் கொள்ளிடத்தில் இருந்து கடலூர் மாவட்டம், சிதம்பரம் வழியாகச் சென்று இளந்திரைமேடு கிராமத்தில் இருந்து கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு சென்று வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்துறை மற்றும் கல்வித்துறை சேர்ந்த அலுவலர்கள் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.

மேலும், இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் 7 ஆசிரியர்களும் கொள்ளிடத்தில் இருந்து சிதம்பரம் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் கொடியம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் தார்ச்சாலை மேம்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. இந்த சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளும், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகிறார்கள்.

இக்கிராமத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மீனவர்கள் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மீன்களை விற்பனைக்கு வாகனங்களில் எடுத்து செல்லும்போது மிகவும் அவதிப்படுகிறார்கள்.

எனவே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்குரிய தார்ச்சாலை பணியை மீண்டும் தொடங்க அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %