ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-13351) ரெயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் போலீஸ்காரர்கள் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு, சக்திவேல் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தி வந்தனர்.
ரெயில் பொம்மிடி வரும்போது எஸ்-11 பெட்டியில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த கைப்பையை திறந்து சோதனை செய்ததில், 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில், ஒடிசா மாநிலம் தண்டபாடி, நிலபடா பகுதியை சேர்ந்த தாஸ் வடகா (வயது 20) என்பதும், இவர் ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்காமல் வந்து, பின்னர் அதற்கான அபராதம் கட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அதன்பேரில் தாஸ் வடகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.