மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் பவன் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் கனிவண்ணன், சரத்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பண்ணை சொக்கலிங்கம், நவாஸ், மூங்கில் ராமலிங்கம், வடவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
75- வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தவேளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற உள்ளது. 1930-ம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையை திருச்சியில் ராஜாஜி தொடங்கிய இடத்திலிருந்து இந்த பாதயாத்திரை 13-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வேதாரண்யம் சென்றடைகிறது.
கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், பலமடங்கு வரி உயர்த்தப்பட்டு ரூ.26 லட்சம் கோடி அளவுக்கு மக்களிடமிருந்து வரியாக பறித்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது கச்சா எண்ணெய் பேரல் 145 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டபோது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் பேரல் 40 டாலர் விலைபோன போது கூட பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. மத்திய அரசு நினைத்தால் கலால் வரியை குறைத்து குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்க முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.
ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது 16 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்திலும் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், பா.ஜ.க. 3-வது இடத்தில் இல்லை. மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததால்தான் சொத்து வரியை உயர்த்த வேண்டிய நிலை மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.