பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை, நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலு. இவர் நகர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மற்றும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு ஆகிய பணிகளை சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் கண்ணாரத் தெரு முக்கூட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் துரிதமாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஏக்கர் நிலப்பரப்பில் மினி ஸ்டேடியம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அவர், பள்ளி தலைமையாசிரியர் அன்புச்செழியனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் சனல் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் சிக்கன நடவடிக்கையாக அரசு வாகனத்தை தவிர்த்து நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டது ெபாதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.