0 0
Read Time:4 Minute, 12 Second

நெய்வேலி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், கடந்த 2021-22-ம் ஆண்டிற்கான உற்பத்தி செயல்பாடுகளில் பல புதிய சிகரங்களை தொட்டுள்ளது.

அதன்படி இந்நிறுவன மின்நிலையங்கள் மற்றும் அதன் துணை நிறுவனமான தூத்துக்குடி என்.எல்.சி.தமிழ்நாடு மின்நிறுவனத்தின் மின்நிலையம் கடந்த நிதியாண்டில் 2920 கோடி யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்து, நிறுவனத்தின் 65 ஆண்டுகால வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

முந்தைய 2020-21-ம் ஆண்டில் இந்நிறுவனம் அதன் துணை நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட மொத்த மின் உற்பத்தி அளவான 2461 கோடியே 30 லட்சம் யூனிட்டை விட, இது 18.64 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-22-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமின் நிலையங்கள் 2589 கோடி யூனிட் மின்சக்தியை மின்வாரியங்களுக்கு வழங்கியுள்ளன. இதுவும் நிறுவன வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்படாத அதிகபட்ச சாதனை ஆகும்.

ஒடிசா மாநிலம், தலபிரா பகுதியில் இந்நிறுவனம் அமைத்து வரும் ஆண்டிற்கு 2 கோடி டன் திறன் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலக்கரி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2020-21-ம் ஆண்டில் மேற்கொண்ட 10 லட்சத்து 13 ஆயிரம் டன்னைவிட, 2021-22 -ம் ஆண்டில் 63 லட்சத்து 58 ஆயிரம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கவல்ல ஆற்றல் உற்பத்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வரும் இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், தனது சூரியஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 218 கோடியே 40 லட்சம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனைபடைத்துள்ளது. முந்தைய 2020-21-ம் ஆண்டில் மேற்கொண்ட பசுமை மின் உற்பத்தியான 206 கோடியே 17 லட்சம் யூனிட்டை விட, இது 5.93 சதவீதம் அதிகமாகும்.

இந்நிறுவனம் 2020-21 -ம் ஆண்டில் மேற்கொண்ட பழுப்பு நிலக்கரி உற்பத்தி அளவான 192 லட்சத்து 62 ஆயிரம் டன்னைவிட, இந்தாண்டு 30 சதவீதம் அதிகமாக 251 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளதுடன், தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 419 கோடி ரூபாய்க்கு பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து, கடந்த 2021-22-ம் நிதியாண்டில், ரூ.2061 கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த முதலீடு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை கடந்து, 17 சதவீதம் அதிகமாக ரூ.2417 கோடியை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவல் என்.எல்.சி். இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு்ள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %