மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அதிகாரி நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் எனது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று, இன்சூரன்ஸ் மற்றும் ஓட்டுனர் உரிமம் நடப்பில் இல்லாமல் இயக்கப்பட்ட 26 சரக்கு வாகனங்கள், 9 வேன்கள், 12 ஆட்டோக்கள், 4 பள்ளி வாகனங்கள், 3 சுற்றுலா வேன்கள் உள்பட மொத்தம் 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர, முறைகேடாக இயக்கப்பட்ட 293 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதமாக ரூ.11 லட்சத்து 77 ஆயிரமும், சாலை வரியாக ரூ.95 ஆயிரத்து 169-ம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வாகன சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு முறைகேடாக இயக்கப்படும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.