கடலூர், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கான (ரசிகர் ஷோ) டிக்கெட் எடுப்பதற்காக, கடலூரை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் அண்ணா பாலம் அருகில் உள்ள தியேட்டருக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த தியேட்டர் ஊழியர்கள், ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கான டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கடலூர் பாரதி சாலைக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதில் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதற்கிடையே அவர்களில் சிலர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.