பொறையாறு அருகே, திருவிளையாட்டம் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், அங்குள்ள ஒருவரது இடத்தில் சேமிப்புக் கிடங்கு அமைத்து அங்கு ராட்சத குழாய்களை இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று ராட்சத குழாய்களை இறக்கி வைக்கப்படுவதை கண்டு அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருவிளையாட்டம் பகுதியில் உள்ள ராட்சத குழாய் சேமிப்புக் கிடங்கை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சேமிப்புக் கிடங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் மற்றும் தரங்கம்பாடி தாசில்தார் புனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் அனைத்து ராட்சத குழாய்களும் அகற்றப்படும் என உறுதி அளித்ததன்பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.