சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 20 மாணவர்கள் பள்ளி முடிந்து தங்களது ஊர்களுக்கு சென்று கெண்டிருந்தனர்.
அப்போது, கே.ஆடூரை சேர்ந்த 17 வயதுடைய 3 மாணவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சில் கூச்சலிட்டு பாட்டு பாடி, மற்றவர்களுக்கு தொந்தரவு செய்துள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பஸ்சில் இருந்த கண்டக்டர் தண்டபாணி கண்டித்துள்ளார். இதனால் மாணவர்கள் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் பஸ் கீழசெங்கல்மேடு கிராமத்தில் நின்ற போது, பஸ்சில் இருந்து இறங்கிய கே.ஆடூரை சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் 3 பேர், பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் தண்டபாணி சிதம்பரம் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 மாணவர்களை கைது செய்து கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தப்பி ஓடிய மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்.