மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.
திருவாடுதுறை, கிராம ஊராட்சியில் நூலக கட்டிடம் மறு சீரமைத்தல், சன்னதி தெரு சாலையை பலப்படுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கால்வாய்கள் கட்டுதல், கால்நடை கொட்டகை, நர்சரி அமைத்தல், பள்ளிவாசல் சாலை முகப்பை சீரமைத்தல், நாககன்னியம்மன் கோவில் தெரு சாலை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், 15-வது நிதிக்குழு மானியத்தில் கால்வாய் அமைத்தல், திரவுபதி அம்மன் கோவில் தெரு சாலையை பலப்படுத்துதல், பிரதம மந்திரி இலவச வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சேது வாய்க்காலில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பொது நூலக கட்டிடம் மறுசீரமைப்பு என மொத்தம் ரூ.84.7 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது குத்தாலம் தாசில்தார் கோமதி, ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் பரமானந்தம், திருவாவடுதுறை ஊராட்சி மன்றத்தலைவர் அர்சிதாபானு சாதிக், ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமி முத்துராமன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லக்குட்டி, ஆலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா வைத்தியநாதன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.