ஸ்ரீமுஷ்ணம், சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 5-ந்தேதி மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பூசாரி சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அதில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், சட்டை அணியாத ஒரு நபர் கோவில் உண்டியலை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனடிப்படையில், நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணத்தில் விருத்தாசலம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபிக், மதுபாலன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, கேமராவில் பதிவாகியிருந்த நபர் வந்ததை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், கம்மாபுரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ரமேஷ் என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதையும், ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.