எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில உறவுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது மலையாளத்தில் தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனக்கு வழிகாட்டியாக திகழ்வதாக தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பண்பாடு என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதே இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு, ஒன்றிய அரசு மக்களை பழிவாங்கி வருவதாக சாடினார். ஆங்கிலேயர் செய்ய நினைக்காததைக்கூட பாஜக அரசு செய்ய முயற்சிக்கிறது எனக்கூறினார்.
தென் மாநில முதலமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மாநிலங்களை அதிக அதிகாரமிக்கதாக மாற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.