திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதில் இருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
ஜெருசேலம் நகரில் கோவேரி கழுதையில் பவனியாக வந்த ஏசுவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று முழங்கியதை நினைவுகூரும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக திருவாரூர் கீழ வீதியில் இருந்து புனித பாத்திமா பேராலய பங்குதந்தை ஜெரால்ட் தலைமையில குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
குருத்தோலை பவனி வடக்கு வீதி, பிடாரி கோவில் தெரு வழியாக சென்று புனித பாத்திமா அன்னை ஆலயத்தை அடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா பாடல் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து வருகிற 15-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.