கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா் என தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் அவா் திங்கள்கிழமை நிருபா்களிடம் கூறியதாவது
நல்லூா் ஒன்றியத்தில் நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத் துறையினா் அண்மையில் ஆய்வு செய்தபோது, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 5 பணியாளா்களின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல, பெலாந்துறை, சிறுமங்கலம் ஆகிய இரு கூட்டுறவுச் சங்கங்களிலும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யாமல், பணியாளா்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவா் என்றாா்.
பேட்டியின்போது நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, துணைத் தலைவா் துரைசேகா், மாவட்டத் தலைவா் கே.ஆா்.தங்கராசு, மாவட்டத் துணைத் தலைவா்கள் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.