சென்னை திருவல்லிக்கேணி, ஆபீசர் வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி பவானி ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு போய் விட்டார். வீட்டில் ரமேஷ் தனது தாயாருடன் இருந்தார். ரமேசும் காலை 8.30 மணிக்கு வேலைக்கு கிளம்பி போய் விடுவார். இதன்பிறகு இரவு 9 மணி அளவில்தான் வீடு திரும்புவார்.
நேற்று காலையில் ரமேஷ் தனது மகளுக்கு பள்ளிக்கூட கல்வி கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்ட நிலையில் பீரோவை திறந்து பணத்தை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காணவில்லை. அதோடு பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைரகற்கள் போன்றவையும் காணாமல் போய் இருந்தது. வீட்டில் தனியாக இருந்த ரமேசின் தாயாரை ஏமாற்றி, யாரோ பீரோவை திறந்து நைசாக நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி ஆந்திரா சென்றுள்ள தனது மனைவியிடம், ரமேஷ் கேட்டார். அதற்கு அவர், தான் ஆந்திரா கிளம்பி வந்தபோது, பீரோவில், நகை-பணம் பத்திரமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
எனவே திருடியவர்கள் யார்? என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து பணம், நகையை மீட்டுத்தர வேண்டும், என்று ரமேஷ் திருவல்லிக்கேணி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பீரோவில் குற்றவாளிகளின் கைரேகை பதிவாகி உள்ளதா என்று கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
ரமேசின் வீட்டுக்கு மர்ம நபர்கள் யாராவது வந்தார்களா என்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் பார்வையிட்டனர்.