பொறையாறு, செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஞானசேகர், சாந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் நூர்பி வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமில் பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, முடக்குவாதம் உடையோருக்கான நாற்காலி, காது கேளாதோருக்கான கருவி, மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான உபகரண தொகுப்பு, கை-கால் தாங்கி உபகரணம் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வரத்தினம், மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.