சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ஆஹா OTT
தளம் சார்பில் திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு கலைஞர் விருதை வழங்கினார்.
தொடர்ந்து, ஆஹா 100 சதவீதம் தமிழ் பொழுதுபோக்கு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய முதலமைச்சர், அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், நான் அதிகமாக பேசுவதில்லை எனவும் செயலில் தான் காட்டுவேன் என்றும், தமிழுக்கு என்றால் நான் எந்த நேரத்திலும் வர தயார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆஹா ஊடகம்
வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஒரு காலத்தில் வானொலி மூலம் செய்தி அறிந்து கொண்டோம் பிறகு செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டோம் தற்போது செல்போனில் அனைத்து தகவல்களும் தற்போது தெரிந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.