பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்த போலீசாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர்.
பட்டவர்த்தி, இளந்தோப்பு, தலைஞாயிறு பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அன்று அப்பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அம்பேக்தர் உருவப்படம் வைத்து நிகழ்ச்சி நடந்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
இதைதொடர்ந்து 13-ந் தேதி(நேற்று) காலை 6 மணி முதல் 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று பட்டவர்த்தி மதகடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.