சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைெபற்று வந்தது.
தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியாக எழுந்தருளினர்.
இதனையடுத்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேல வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் குளிர்பானங்கள், நீர் மோர் வழங்கப்பட்டது.