கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஜெயின் சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேரடி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கோவிலில் இருந்து மகாவீரர் படத்தை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு ஜெயின் கோவிலில் தீபாராதனை நடந்தது. இதில் திரளான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பண்ருட்டியில் மகாவீர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கஸ்தூரிபாய் தெருவில் உள்ள மகாவீர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மகாவீர் சிலையுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பொன்னுசாமி தெரு, ஜவகர் தெரு, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, சப்பானி தெரு, வள்ளலார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஜெயின் கோவிலை வந்தடைந்தது. இதில் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.