சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலைஆறு ராஜன் வாய்க்கால், பொறைவாய்க்கால், புது மண்ணியாறு, திருநகரி வாய்க்கால், முடவன் வாய்க்கால், பாப்பான் ஓடை வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், ஊசி வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால் உள்ளன. இந்த வாய்க்காலை நம்பி சீர்காழி தாலுகாவில் உள்ள சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், மாதானம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட வாய்க்கால்கள் தற்போது செடி, கொடிகள் மண்டி காணப்படுகிறது. இந்த வாய்க்கால்களை ஆண்டுதோறும் மழைக்காலம் மற்றும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் போது தூர்வாரப்படுவதால் முழுமையாக தூர்வாரப்படுவது இல்லை.
இதனால் விவசாயிகள் பாசன நீர் பெறமுடியாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலமாக உள்ளதால் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.