கடலூர், தமிழ்ப்புத்தாண்டையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாடலீஸ் வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை, பிடாரி அம்மன், உற்சவ நாயகர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. அப்போது பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தங்க கவச அங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு நந்திகேஸ்வரருக்கும், பாடலீஸ்வரருக்கும் அபிஷேகம், தீபாரானை நடந்தது. மாலை 5.30 மணிக்கு உற்சவர் சந்திரசேகரருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
அதன்பிறகு உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் வலம் வந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு பஞ்சாங்க படனம் எனும் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடந்தது. 9 மணிக்கு அர்த்தசாம பூஜையும், பள்ளிஅறை பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன், வினைதீர்த்த விநாயகர் கோவில், செல்வ விநாயகர், மாரியம்மன், முதுநகர் வீரஆஞ்சநேயர் உள்பட பல்வேறு கோவில்களிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.