சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.
அண்ணாமலைநகர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84-வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெறுகிறது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
மேலும் இவ்விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கார் மூலம் சிதம்பரத்திற்கு வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் சீதாராமன், கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அவர் பல்கலைக்கழக சிண்டிகேட் ஹாலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பல்கலைக்கழக தோற்றம், தற்போது வரை பல்கலைக்கழகம் அடைந்துள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல், கற்றல், மதிப்பீடு, ஆராய்ச்சி, விளையாட்டு குறித்தும், பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
அப்போது அம்பேத்கர் பெயரில் ஒரு இருக்கை, திருக்குறளுக்காக ஒரு இருக்கை செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கவர்னர் கூறும்போது, ஆராய்ச்சி பிரிவுகளில் புதிய இருக்கைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலக அளவிலான விஞ்ஞானிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக பேரசிரியர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதை கவர்னர் பாராட்டினார். பல்கலைக்கழக யோகா பயிற்சி நிலையம் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகம் மூலம் புதிய சிகப்பி நெல் ரகம் வெளியிடப்பட்டது. இங்கு தொடங்கப்பட்ட திட்டமான வயலில் நெல், மீன், கோழி வளர்ப்பு முறை நேபாளம் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய ஒருமைப்பாடு குறித்து பல்கலைக்கழக கலைத்துறை சார்பில் நடந்த கலைநிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என். ரவி, அவருடைய மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டீல் கலந்து கொண்டார்.