0 0
Read Time:3 Minute, 29 Second

சென்னை, அயனாவரத்தில் கஞ்சா விற்க உதவிய 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திரு.வி.க. நகர், சென்னை அயனாவரம் திக்கா தோட்டம் பகுதியில், ஒருவர் விற்பனைக்காக கஞ்சாவுடன் நிற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற துணை கமிஷனர் கார்த்திகேயனின் தனிப்படை போலீசார், 1 கிலோ கஞ்சாவுடன் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த திலீப்குமார்(வயது 39) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

2016-ம் ஆண்டு திருவல்லிக்கேணி போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்துவந்த எனது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு கருணை அடிப்படையில் எனது தம்பி தண்டபாணிக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தது. தண்டபாணி அயனாவரம் பனந்தோப்பு காலனியில் வசித்து வருகிறார்.

எனது தம்பியை பார்க்க வரும்போது, அதே குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ரெயில்வே போலீஸ்காரர் சக்திவேல்(29) மற்றும் தமிழ்நாடு போலீசில் வேலை செய்து வரும் செல்வக்குமார்(25) ஆகிய இருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

வழக்கில் சிக்கிய நாங்கள் 3 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினோம். அப்போது ரெயில்வே போலீஸ்காரரான சக்திவேல், ஒரு வழக்கில் பிடிபட்ட 1 கிலோ கஞ்சாவை, அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்து உள்ளேன். அந்த கஞ்சாவை விற்று தருமாறு என்னிடம் கூறினார். அதன்படி அந்த காஞ்சாவை விற்பதற்காக நின்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர்கள் சக்திவேல், செல்வக்குமார் ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

சென்னையில் கஞ்சா விற்பவர்கள் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா விற்பவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது. இந்நிலையில், போலீஸ்காரர்கள் 2 பேர் கஞ்சா விற்க முயன்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %