திருநகரி-வெள்ளப்பள்ளம் உப்பனாறு தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
திருவெண்காடு, திருநகரி-வெள்ளப்பள்ளம் உப்பனாறு தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று அண்ணன் பெருமாள் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் சிவ மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் வனஜா, துணை செயலாளர்கள் திருமாறன், பத்மாவதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருநகரி கிராமத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை கட்ட கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள் விடுப்பது, செம்பதனிருப்பு- கீழையூர் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை மாவட்ட பிரதிநிதிகள் உஷா, சிவதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.