சென்னை, போதை, புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு மாணவர் சமுதாயம் ஆளாகமல் தடுக்கும் வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற பொருட்கள் விற்பனை செய்த 268 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 277 கிலோ குட்கா, மாவா, புகையிலை பொருட்களும், 9 ஆயிரத்து 234 சிகரெட் பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற கஞ்சா சோதனை வேட்டையில் 209 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை போலீஸ்துறை சார்பில் போதை மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிராக, தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படும். எனவே தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை பொருட்கள், குட்கா, மாவா, வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான பொருட்கள் வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.