சீர்காழியில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழியில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி நகர் பகுதியில் முக்கிய சாலையாக கடைவீதி சாலை, பிடாரி வடக்கு வீதி சாலை, கச்சேரி ரோடு, பழைய பஸ் நிலைய சாலை, கொள்ளிடம் முக்கூட்டு ரோடு, மயிலாடுதுறை சாலை, சிதம்பரம் சாலை, ரெயில்வே ரோடு உள்ளிட்ட சாலைகள் இருந்து வருகின்றன. இந்த சாலைகளில் பள்ளி நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
அப்போது போக்குவரத்து இடையூறாக சாலைகளின் இருபுறங்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி வாகனங்களை நிறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.