சீர்காழி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலையா தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் நாகப்பன், ஒன்றிய தலைவர் பரணிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்க தொகை ரூ.15 ஆயிரம் ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் சீர்காழியில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.