நெய்வேலி விஷ்ணு பிரியா காளி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெய்வேலி 28-வது வட்டத்தில் விஷ்ணுபிரியா காளி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தீமிதி திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நேற்று கோவில் வளாகத்தில் உள்ள திரிவேணி சங்கமம் குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலில் குருஜி கண்ணப்பனார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
அதன் பின்னர் விஷ்ணு பிரியா காளிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.