ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, கோவை முகவரியில் பழனிசாமி சுப்பிரமணி (வயது 54) என்ற பெயரில் பயணி ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டில் வந்து இருந்தாா்.
அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் அவர், இலங்கை தமிழ் கலந்து பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் துருவித் துருவி விசாரித்தனர். அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அது போலி என தெரியவந்தது.
விசாரணையில் அவர், இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் சுப்பிரமணி என தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த அவர், பின்னர் இங்கேயே தங்கி விட்டார். அதன்பிறகு கோவையில் உள்ள ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து, கோவை முகவரியில் இந்திய பாஸ்போர்ட் வாங்கி உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுப்பிரிவு போலீசாா், மாநில உளவு பிரிவு போலீசார் ஆகியோர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவருக்கு போலி பாஸ்போர்ட் வாங்குவதற்கு உதவி செய்தது யார்? போலி பாஸ்போா்ட் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்துள்ளாா்? என்பது போன்ற விவரங்களை அவரிடம் சேகரித்தனர்.
பின்னர், மேல் விசாரணைக்காக கண்ணதாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.