மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட உளுந்து, பயறு செடிகள் அழுகி நாசம் அடைந்தன.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், பூம்புகார், மங்கைமடம், வைத்தீஸ்வரன்கோவில், ஆணைக்காரன்சத்திரம், எருக்கூர், அரசூர், எலத்தூர், குன்னம், பெரம்பூர், ஆச்சாள்புரம், பழைய பாளையம், மகேந்திரப்பள்ளி, திருமுல்லைவாசல், கடவாசல், திட்டை, தில்லைவிடங்கன், விளந்திட சமுத்திரம், அத்தியூர், கதிராமங்கலம், ஆதமங்கலம், பெருமங்கலம், எடக்குடிவடபாதி உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பயிறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை செய்யப்பட்ட உளுந்து, பயிறு வகை செடிகள் அழுகி நாசமாகின. இதேபோல் தொடர் மழையால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நஷ்டத்தை கோடை சாகுபடியில் சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில் ஊளுந்து, பயறு வகை பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் பருவம் தவறிய பெய்து வரும் மழையால் கோடை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் இந்த மழையால் செங்கல் சூளை நடத்திவரும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.