மயிலாடுதுறை, சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் அரசு பஸ் ஒன்றில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் செல்லும் வகையில் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களுக்கு சென்ற இந்த வாகனம் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது. மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முன்னதாக புகைப்படக் கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சீர்காழியிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செம்பனார்கோவில் பகுதியிலும் உள்ள பள்ளிகளில் இந்த கண்காட்சி வாகனம் நிறுத்தப்பட உள்ளது.