மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர், விதவை உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 127 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற துணைச் செயலாளர் தமிழ்தென்றல் தலைமையில் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருவதால் கடல்நீர் மயிலாடுதுறை ஒன்றிய பகுதி வரை புகுந்து விட்டது.
எனவே, விதிமுறைகளை மீறி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை தாலுகா, மாப்படுகை கிராமம், கன்னிதோப்பு தெருவை சேர்ந்த விஜய் என்பவர், கடந்த ஆண்டு வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் விக்னேசுக்கு கருணை அடிப்படையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளருக்கான ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 36 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.