சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சீர்காழி அருகே, காத்திருப்பு என்ற இடத்தில் சின்னந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலை இடிக்க கூடாது என வலியுறுத்தியும், இடித்தால் புதிய கோவில் கட்டித்தரக்கோரியும் சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பாகசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், புதிய கோவில் கட்ட அரசிடம் அனுமதி பெறுவது என உறுதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி (நகாய்) செண்பகராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.