பண்ருட்டி அருகே, ஊராட்சி பெண் கவுன்சிலரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்த பைனான்ஸ் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி அருகே, உள்ள அழகப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி தைரியலட்சுமி (வயது 31). இவர் அழகப்பசமுத்திரம் ஊராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும் வட்டி தொழில் செய்து வரும் பண்ருட்டி விழமங்கலத்தைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சேகர் (35) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சேகர், தைரியலட்சுமியிடம் நான் உங்களுக்கு வட்டி தொழில் கற்றுத் தருகிறேன் எனவும், உங்களிடம் இருக்கும் பணத்தை தன்னிடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.
இதை நம்பிய தைரியலட்சுமி தன்னிடம் இருந்த நகைகளை பண்ருட்டியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து சேகரிடம் ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சேகர், ஜெயலட்சுமிக்கு வட்டி தொழிலையும் கற்றுத் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
சம்பவத்தன்று தைரியலட்சுமி சேகரிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டபோது, தற்போது பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைனான்ஸ் அதிபர் சேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.