பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சியில் 12 ஏக்கர் பரப்பளவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.
இதையடுத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அருண்மொழிதேவன் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கேட்டறிந்த அவர் ஏரியில் நல்ல ஆழமாக மணல் எடுத்து கரையை பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அவருடன் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) பவன்குமார் ஜி கிரியப்பனவர், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, புவனகிரி தாசில்தார் ரம்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், குமார், ஊராட்சி மன்ற தலைவர் காந்தாமணி காளிமுத்து, ஊராட்சி செயலாளர் குமார தேவன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உடன் இருந்தனர்.