நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச் செல்லும் நிலை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்வதாக புகார். பத்து வருடமாக மனு கொடுத்தும் இதுநாள் வரை அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பும் அப்பகுதி மக்கள்,
இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சென்றுள்ளனர்,
நடப்பதற்கு பாதையைத்தானே அமைத்து கேட்கிறோம். தற்காலிக நடைபாதையாவது அமைத்து தருவார்களா அரசு அதிகாரிகள் என கவலை தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி தாலுக்கா தொப்பையாங் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவின் அருகே வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வதற்கு தனிப்பட்ட நபர் ஒருவரின் பட்டா காலி மனை வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது அவரும் வீடு கட்டி விட்டதால் அந்த வழியை பயன்படுத்தும் நிலை இல்லாமல் போனது மீண்டும் வாய்க்காலை பயன்படுத்தும் நிலை மீண்டும் தொடர்வதாகவும் அதனால் பாதை அமைத்து தரக்கோரி கடந்த பத்து வருடமாக போராடி கொண்டு வருகிறோம் என கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில்,
இதுநாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் முதியவர்கள் வரை தினசரி அந்த வழியாகச் செல்லும் பொழுது விஷ ஜந்துக்களிடம் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வீட்டுக்கு செல்லும் நிலை தினசரி தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாருக்கு எந்த நேரத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டி உயிர் போகுமோ என திக் திக் என பயத்துடன் செல்லும் அவலநிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் மழை பெய்தால் இந்த வாய்க்காலை பயன்படுத்தும்போது படிக்கும் குழந்தைகள் தண்ணீரில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மனு கொடுக்க சென்று கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு இன்றைக்காவது நியாயம் கிடைக்குமா கிடைக்காதா என கூறிவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அவர்களுக்கு தற்காலிக பாதையாவது அமைத்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்