திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூர், மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், கண்ணங்குடி, கிள்ளியூர், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, காலமநல்லூர், மருதம்பள்ளம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிர் உள்ளிட்ட பயறு வகை கோடை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பயிர்கள் 40 நாட்களில் வளர்ந்து விடும். அதன்படி, திருக்கடையூர் அருகே உள்ள கிள்ளியூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது உளுந்து அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிர்களை விவசாயிகள் வயலிலேயே குவித்து தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
மழையின் காரணமாக இந்த உளுந்து பயிரானது அழுகியும், முளைத்தும் வருகின்றன.
இதனால், கவலை அடைந்த விவசாயிகள், அழுகிய உளுந்து பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.