காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சமயத்தில் நம் கைவீரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரும்,
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பேசியதாவது:-
விண்வெளியில் இப்போது நாம் எங்கு இருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கிறேன். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அகண்ட மேற்கண்ட வெளியின் பால்வெளி மண்டலத்தில் ஒரு புள்ளியாக நாம் இருக்கிறோம். மனிதர்களான நாமும் பல்வேறு வகையில் முன்னேறி இருக்கிறோம்.
காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சில சமயங்களில் நம் விரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தை நாம் கவனமாக கையாள வேண்டும். மேலும் சமூக ஊடகங்களில் வலைத்தளங்களையும் நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும். எப்போதும் உங்கள் குறிக்கோளை மையமாக வைத்து இருங்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சிக்குட்படாத தொழில்நுட்பம் பயனற்றது. விஞ்ஞானத்தின் வாயிலாக ஏற்படும் உற்பத்தி திறன் மனித வள மேம்பாட்டையும், பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
ஆராய்ச்சியும், வளர்ச்சியும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. இந்தியாவின் ஆராய்ச்சி சார்ந்த குழுமங்களும், ஆணையங்களும் செம்மையான முறையில் செயல்படுகின்றன.
மனிதர்கள் விண்வெளியில் பறக்க இயலாது என்பதை அறியாமல் தான் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள். நம்முடைய இஸ்ரோ, சந்திராயன் மற்றும் மங்கள்யான் ஆகியவற்றை சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றை நோக்கி பயணிக்க வைத்த போது அது முதல் சோதனைகளை சாதனையாக்கி விடும் என்று அறியாமல் தான் அந்த பணியில் ஈடுபட்டது.
உயர் கல்வித்துறையின் நீட்சி இன்று வியக்க வைக்கிறது. தரம், வேலை வாய்ப்பு, பல கலாசார புரிதல் ஆகியவை ஒரு தேசத்தை முன்னேற்றும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.