சீர்காழி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்பினர் இணைந்து பணியாற்றுதல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில முதன்மை பயிற்றுனர் குமரேசன் தர்மசீலன், மாவட்ட முதன்மை பயிற்றுனர் சத்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஊராட்சிகளை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
குறிப்பாக குடிநீர், சாலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் இணைந்து உருவாக்குவதன் மூலம் ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் என்றனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசுகையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் இணைந்து பணியாற்றுதல் குறித்த கூட்டம் வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 10 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு தலைவர் உள்ளிட்ட 60 பேர் கலந்து கொள்கின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் பயன்படுத்திக்கொண்டு ஊராட்சிகளை முன்னேற்ற பாடுபடவேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.