மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்யக்கூடாது.
ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊராட்சியில் தீர்மானம் வைத்து பணிப்பதிவேடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிவேல், மின்ஊழியர் மத்திய அமைப்பு சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சின்னக்கடை வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.