காட்டுமன்னார்கோவிலில் பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.
மேலும் தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து ருக்மணி, சத்யபாமா, ராஜகோபாலசாமி மற்றும் நாதமுனி சாமியை ஊர்வலமாக கோவில் அருகில் உள்ள பெரிய குளத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் சாமிகள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது.
இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்..