தஞ்சாவூர், தீத்தொண்டு வாரத்தையொட்டி தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இதையொட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். இவர்கள் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரமும் தீயணைப்புத்துறையினர் வினியோகித்து வருகிறார்கள்.
அதன்படி தஞ்சை தீயணைப்புத்துறை சார்பில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா கொடியசைத்து தொடங்கி வைததார். இதில் உதவி மாவட்ட அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் (பொறுப்பு) பழனிசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையம் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, பெரியகோவில், மேம்பாலம், குந்தவைநாச்சியார் கல்லூரி, ராமநாதன் ரவுண்டானா, மேரீஸ்கார்னர், ரெயிலடி வழியாக மீண்டும் அரண்மனை வளாகத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுப்பு குறித்தும், சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினர்.