நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல், திருமண மண்டபங்களில் உள்ள குப்பைகளை அள்ளமாட்டோம் என அதிகாரிகள் கூறியதால் அதிருப்தி அடைந்த வர்த்தக சங்கத்தினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புசெய்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியும், தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆணையர் பார்த்தசாரதி பேசும்போது இனி வருங்காலங்களில் ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உள்ள குப்பைகளை நகராட்சி மூலம் பெற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக நீங்களே குப்பைகளை தரம்பிரித்து உரமாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய துப்புரவு அலுவலர் சக்திவேல் நெல்லிக்குப்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது வணிகர் சங்க நிர்வாகிகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் சேரக்கூடிய குப்பைகளை நகராட்சி மூலம் எடுக்காவிட்டால் கடும் பாதிப்பை உருவாக்கும். நகராட்சிக்கு சொத்து வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளைக் கட்டுவது எதற்கு? நாங்கள் வரி கட்டாமல் எங்கள் குறைகளை நாங்களே சரி செய்து கொள்ளலாமா? என காரசாரமாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் அனைவரிடமும் கருத்து கேட்டு நடவடிக்கை மேற்கொள்ள இங்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர். ஆனால் நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்க தலைவர் நாசர், செயலாளர் ராமலிங்கம் தலைமையிலும், நெல்லிக்குப்பம் வியாபாரிகள் தொழில் புரிவோர் நலசங்க தலைவர் ஷேக் தாவூத், செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலும் நிர்வாகிகள் திடீரென்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வர்த்த சஙகத்தினர் கூறும்போது, நகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட இந்த மாற்றத்திற்கு நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது சம்பந்தமாக மீண்டும் கூட்டம் நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.